இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால், முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் பயனச்சீட்டிற்கான முழு தொகையும் திருப்பியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 21ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, ரூ.1,885 கோடி ரூபாயை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குத் திருப்பி அளித்தது.
ரயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்ட நிலையில், மே முதல் வாரம் முதல் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் குறைவான வைரஸ் பாதிப்பு உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்பு ரயில்களைத் தவிர, ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான ரயிலுக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கான முழுத் தொகை திருப்பி அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து - வெளியிடும் பதஞ்சலி நிறுவனம்!