மும்பை: ரி பப்ளிக் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது ராய்காட் காவல்நிலைய காவலர்கள் 1914 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு கட்டட உள்அலங்கார வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் ரி பப்ளிக் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்பட மூன்று பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அர்னாப் கோஸ்வாமி, பெரோஷ் ஷேக், நிதிஷ் சர்தா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு மகாராஷ்டிரா காவல்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த காவலர்கள், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவருக்கும் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதற்கிடையில் ராய்காட் காவலர்கள் அர்னாப் கோஸ்வாமி மீது 1914 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அலிபாக் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் பெரோஷ் ஷேக் மற்றும் நிதிஷ் சர்தா உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்று அரசு வழக்குரைஞர் பிரதீப் காரத் கூறினார்.
இந்த மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 109 (தண்டனைக்குரிய குற்றத்துக்கு உடந்தை) மற்றும் 34 (பொதுவான தலையீடு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1914 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 65 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அன்வே நாயக் தற்கொலை கடிதத்தில் உள்ள கையெழுத்து பிரதி அவரது கையெழுத்தோடு ஒத்துப்போவதாகவும் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்வே நாயக் தற்கொலை வழக்கு இந்தாண்டு மே மாதம் மீண்டும் தூசிதட்டப்பட்டது. ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : அர்னாப் கோஸ்வாமிக்கு பாதுகாப்பு அளிக்க முதலமைச்சர் கோரிக்கை!