இந்திய - சீன பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
மோடி செய்த தொடர் தவறுகளால்தான் சீனா, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான விவகாரங்களில் தன்னுடைய நிலைபாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'ஜான் கீ பாத்' என்ற பெயரில் அவர் வீடியோ தொகுப்பை வெளியிட தொடங்கியுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட அதன் முதல் பாகத்தில், இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடிக்க காரணம் என்ன? குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் இந்தியா போன்ற நாட்டிற்கு எதிராக அது இம்மாதிரியான நடவடிக்கையை ஏன் எடுக்க வேண்டும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "மற்ற நாடுகளுடன் கொண்ட நல்லுறவு, அண்டை நாடுகளுடனான பொருளாதார நிலை ஆகியவற்றால் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் எண்ணினர். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக, இத்துறைகள் பெரும் பாதிப்படைந்துள்ளன.
மோடி பிரதமராவதற்கு முன்பு, அமெரிக்க, ரஷ்ய நாடுகளுடன் வியூக ரீதியான உறவை இந்தியா கொண்டிருந்தது. தற்போது, அது எதிர்பார்ப்புகள் நிறைந்த வணிக உறவாக சுருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடனான உறவிலும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை தவிர, நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவுடன் இருந்து செயல்பட்டுவந்தது.
இன்று, நம்முடன் நேபாளம் கோபமாக உள்ளது. நேபாளத்திற்கு சென்று அந்நாட்டு மக்களுடன் உரையாடினால் நடைபெற்றதை எண்ணி அவர்கள் கோபப்படுகிறார்கள். துறைமுகம் ஒன்றை சீனாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது.
மாலத்தீவு, பூடான் நாடுகள் கலக்கமடைந்துள்ளன. மோசமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளோம். 40, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுடன் உரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர்