நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னையான வேலைவாய்ப்பின்மையை மையப்படுத்தி நடத்தப்படுவது 'இளைஞர் சீற்றப் பேரணி'.
இது தொடர்பாக, இந்திய இளைஞர் காங்கிரஸானது ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நிர்வாகக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியது. இந்திய தேசிய மாணவர் சங்கத்துடன் தொடர்புடைய ஏராளமான இளைஞர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் தேசியத் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாசன், ராஜஸ்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் சந்தனா, இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் நீரஜ் குண்டன், ராஜஸ்தானின் இந்திய தேசிய மாணவர் சங்க தலைவர் அபிமன்யு புனியா அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலட், ராகுல் காந்தியின் இந்த இளைஞர் பேரணியில் இந்திய தேசிய மாணவர் சங்கமும், இந்திய இளைஞர் காங்கிரஸும் அதிகபட்ச பங்களிப்பை பதிவு செய்யும் என்றார்.
மேலும் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வரும் நிலையில் இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டுவருவதை மையப்படுத்தி ராகுல் காந்தி இளைஞர்களிடம் பேசவுள்ளார் என்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின் பேரில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தியின் முதல் பேரணிக்கு ராஜஸ்தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மாநில காங்கிரஸ் பிரிவுக்கு பெருமை அளிப்பதாகவும் அசோக் கெலட் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமராவதி மட்டுமே தலைநகரம் vs அமராவதியும் ஒரு தலைநகரம் - வெல்லப்போவது யார்?