ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 10ஆம் தேதி, அரசு ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்டதாக, கூறினார்.
ராகுலின் இந்த கருத்துக்கு எதிராக பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி மீனாட்சி லக்வி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், ராகுல் காந்தி இரு முறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். இரு முறையும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாக மட்டுமே கூறினார்.
அதனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவருக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, 3 பக்க பிரமாணப்பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று தாக்கல் செய்துள்ளார்.