கரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று (செப்.16) தனது ட்விட்டர் பக்கத்தில், "21 நாள்களில் கரோனாவை தோற்கடித்துக் காட்டுவோம், மக்களைப் பாதுகாக்கும் ’ஆரோக்கிய சேது’ செயலி வெளியீடு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு அறிவிப்புகள் என மத்திய அரசு தொடர்ந்து வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, காற்றில் அரண்மனை கட்டி வந்தது.
அது மட்டுமின்றி, இந்திய எல்லைக்குள் இதுவரை எவரும் நுழையவில்லை எனக் கூறி மக்களின் எண்ணங்களை வேறு பிரச்னைகளில் திசைத்திருப்பி வந்தது. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழலுக்கான நிவாரண நிதி (PM CARES), கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
கரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவது, தரமான சிகிச்சை வழங்குவது, வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி வசதி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களையும் வெளியிட மத்திய அரசு மறுக்கிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.