தனது மனைவி, இரு மகள்கள் கோவிட்-19 தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் கண்ணீர் மல்கப் பேசி டெல்லியைச் சேர்ந்த ஊடகவியலாளர் அஜய் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், அந்தக் காணொலியில் தனது மாமனார், மாமியார் கடந்த வாரத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டனர் எனவும் தெரிவித்திருந்தார். இந்த காணொலி அதிகம் பேரால் பகிரப்பட்டது.
இந்த காணொலியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்து, ஊடகவியலாளரின் துன்பத்தில் பங்குகொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், மில்லியன் கணக்கான எனது சகோதரிகளும், சகோதரர்களும் அஜய் போன்று துன்பத்திற்குள்ளாகியிருப்பதாக தெரிவித்த அவர், அஜய்க்கு தேவையானதைச் செய்வோம் எனவும்; இந்த துன்பத்திலிருந்து நாம் மீள்வோம் எனவும் குறிப்பிட்டார்.
அஜய்யைத் தொடர்புகொண்டு அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய, தனது கட்சித்தொண்டர்களுக்கு ராகுல் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், அஜய்க்கு தேவையான உதவிகளைச் செய்தனர்.
இதயத்தை நொறுக்கக்கூடிய காணொலியை வெளியிட்ட அஜய், பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.