கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதனையடுத்து, பஞ்சாபில் நேற்று (அக். 25) தசரா விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி உருவ பொம்மையை அசுரனாக வடிவமைத்து எரித்தனர்.
இந்நிலையில், இது குறித்த செய்தியை மேற்கோள்காட்டிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “இது நேற்று பஞ்சாப் முழுவதும் நடந்த ஒன்று. பிரதமர் மீது பஞ்சாப் மக்கள் இந்தளவுக்கும் கோபத்தை கொண்டுள்ளனர். இது வருத்தமளிக்கிறது. அதுமட்டுமின்றி இது நம் நாட்டுக்கு ஆபத்தான ஒன்று. அதனால் பிரதமர் விரைவாக பஞ்சாப் சென்று விவசாயிகளின் குரலை கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பஞ்சாப் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சிரோமணி அகாலி தளம்