இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவும் சூழலில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேச ராகுல் காந்தி இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவிட்-19 பரவலை ஊரடங்கு உத்தரவால் கட்டுப்படுத்த முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "கோவிட்-19 வைரஸ் பரவலை ஊரடங்கால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு என்பது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது. கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதம், பரிசோதனைகளை அதிகப்படுத்துவது மட்டுமே. நாம் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளை நாம் விரைவில் அதிகரிக்க வேண்டும்" என்றார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்னை குறித்துப் பேசிய அவர், "வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர். எனவே, மற்ற நாடுகள் பின்பற்றும் திட்டத்தை நம்மால் பின்பற்ற முடியாது. ஊரடங்கை நீக்க நமக்கு விரிவான திட்டம் தேவை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் உத்தரப் பிரதேசத்தில் மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறேன். கேரளாவில் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளேன். இந்த கோவிட்-19 வைரசைக் கையாள்வதில் இரு மாநிலங்களுக்குமிடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. கோவிட்-19 வைரசை கேரளா சிறப்பாகக் கையாண்டு வருகிறது.
எனக்கும் பிரதமர் மோடிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இப்போது அதையெல்லாம் மறந்து வைரஸ் பரவலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார்.
நாடு தற்போது சந்தித்துவரும் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர், "மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருப்பது உண்மைதான். ஆனால், அது தற்காலிகமாக இருக்கும் என நம்புகிறேன்.
தற்போதுள்ள நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை தடுக்க இதுதான் ஒரே வழி - ராகுல் தரும் ஐடியா