17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக தமிழ்நாட்டில் எங்காவது போட்டியிடலாம் என ஒரு தரப்பும், வட இந்தியாவில் வேறு இடத்தில் போட்டியிடலாம் என மற்றொரு தரப்பும் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள்.
ஆனால் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை உறுதிசெய்தார். ராகுல் காந்தியின் இந்த முடிவு அவருக்கு பெரிதும் உதவியுள்ளது.
ராகுல் காந்தியின் சொந்த தொகுதி, காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த அமேதி அவரை கைவிட்டுவிட்டது. அமேதியில் குறைவான வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். அதேசமயம் வயநாடு தொகுதியில் 2,00,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு அமேதி அதிர்ச்சியளித்திருக்கிறது. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஒரே ஒருமுறை மட்டும்தான் பாஜக வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கோட்டை ராகுலை கைவிட்டுவிட்டது, சமயோஜிதமாக தேர்ந்தெடுத்த வயநாடு வாழ்வளித்திருக்கிறது.
2009ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட வயநாடில் காங்கிரஸ் கட்சிக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அங்கு இரண்டுமுறை நடந்த மக்களவைத் தேர்தலிலும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. ஷாநவாஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.