ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அங்கு நடக்கும் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தாருமே காரணம்.
அவர்கள் இளந்தலைவர்கள் மீது பொறாமை கொள்கிறார்கள், அவதூறாக நடத்துகிறார்கள்” என்றார். முன்னாள் காங்கிரஸ் இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா குறித்து அவர் கூறுகையில், “அவரை நான் பிறப்பிலிருந்தே அறிவேன். அவருக்கு என் ஆசிர்வாதங்கள் உள்ளன. சிந்தியாவுக்கு மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுக்க சிறப்பான எதிர்காலம் இருக்கும்” என்றார்.
ராஜஸ்தானில் கடந்த சில நாள்களாக அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தியாளரான சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு பின்னணியில் பாஜக இருக்கிறது என மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றஞ்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
இதையும் படிங்க: பைலட்டை துரத்துவதில் கெலாட் மும்முரம், தானாக ஓடும் ராஜஸ்தான் அரசு!