நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இருந்தும் தென்னிந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என தென்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கைவைத்தனர்.
இதனையடுத்து, கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து, ராகுல் காந்தியும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
இது குறித்து அக்கட்சி மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தேர்தல் அலுவலர்இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் வருவார்' என்று தெரிவித்தார்.