மாதேபுரா (பிகார்): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிகார்கஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு சோசலிஷ மூத்தத் தலைவர் சரத் யாதவ்வின் மகள் சுபாஷினி யாதவ்வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, “வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் நரேந்திர மோடி, நிதிஷ் குமார் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.
பேரணியில் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “கரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்தில் ஏழை தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி -யும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவ்வும் கைகொடுக்கவில்லை. பிரதமரின் இதயத்தில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடம் இல்லை. கரோனா நெருக்கடி காலத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இதனை பிகார் மக்கள் நன்கறிவார்கள். இதற்கிடையில் புதிய இடைத்தரகர்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று விவசாய சட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அந்தத் இடைத்தரகர்கள் எளியவர்கள் அல்ல, அவர்கள் அம்பானி, அதானி போன்றவர்கள். இனிவரும் காலங்களில் விவசாய பொருள்கள் விற்பனை செய்யும் மண்டிகள் காணாமல் போய்விடும்.
ஏனெனில் விவசாய பொருள்கள் பெரிய பெரிய குடோன்களுக்கு சென்றுவிடும். இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. மாறாக பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறது. கடந்த தேர்தலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பேன் என்று நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார்.
தற்போது வேலை வாய்ப்புகள் எங்கே என்று இளைஞர்கள் வினாயெழுப்புகின்றனர். ஆனால், அவர்கள் மிரட்டப்படுகின்றனர்” என்றார். இந்தப் பேரணியில் மூத்தத் தலைவர் சரத் யாதவ்வை ராகுல் காந்தி புகழ்ந்தார். “அவர் தனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் தன்னுடைய குருவுக்கு சமமானவர்” என்றும் கூறினார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020 மூன்று கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், முதல் கட்ட வாக்குப்பதிவு சென்ற 28ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 3ஆம் தேதியும் நடைபெற்றன. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு வருகிற 7ஆம் தேதி நடைபெற்று, தேர்தலில் பதிவான வாக்குகள் 10ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
இதையும் படிங்க: ராகுல் காந்தி வெற்றிக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி