பிகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இன்று (அக்.23) தொடங்கினர். முன்னதாக, ஹிசுவா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியப் பகுதிக்குள் சீன வீரர்கள் ஊடுருவவில்லை எனக் கூறி ராணுவ வீரர்களை மோடி அவமதித்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்திய நிலத்தின் 1,200 கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீன ராணுவம் ஊடுருவிய போது, அப்படி ஏதும் நடைபெறவில்லை எனக் கூறி நம் ராணுவ வீரர்களை மோடி ஏன் அவமதித்தார்? நம் எல்லைப் பகுதியிலிருந்து சீனர்களை எப்போது விரட்டி அடிக்கப் போகிறீர்கள்? கரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது வெளிமாநிலத் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்டபோது மோடி ஏன் அவர்களுக்கு உதவவில்லை?
பிகார் மக்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகளை அவர் உருவாக்கித் தந்துள்ளார் என மோடி விளக்க வேண்டும்" என்றார். காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் நீது சிங்குக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவந்த ராகுலைக் காண அக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
இதையும் படிங்க: போலி ஆதார் அட்டைகள் அச்சடித்து விநியோகித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிரமுகர் கைது!