இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சீன விவகாரத்தில் பிரதமர் தூங்கிக்கொண்டிருக்கிறார், அதற்கான விலையை இந்தியா கொடுத்துக்கொண்டிருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவத்தின் நகர்வுகள் பல மாதங்களாக திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
ஜூன் 15 ஆம் தேதியன்று இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், ஒரு ராணுவ உயர் அலுவலர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் ஏரி மற்றும் டெப்சாங் பகுதிகளில் உள்ள எல்.ஐ.சியில் இருநாட்டு ராணுவ அலுவலர்கள் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்பட வேண்டும் என்று ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்திருந்தார்.
"இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு நெறிமுறையின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், இரு நாடுகளின் பிரதிநிதிகள் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கூடுதல் படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.