இந்தியாவின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 முடிவடைகிறது. மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பரப்புரை என பல வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் மும்முரமாகியுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தால், நாட்டில் உள்ள 20 சதவிகித ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.