கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டம் அருகே உள்ளது ஹம்பி என்ற சுற்றுலா தளம். வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதியில் உள்ள கட்டடக் கலைகளை காணவும் கல்வி தொடர்பான ஆராயச்சிக்காகவும் மாணவர்கள் வருகை தருவதுண்டு. அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக ஹம்பிக்கு வருகை தந்துள்ளனர்.
புவியியல் பிரிவில் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் 7 மாணவர்களும் கடந்த 12ஆம் தேதி ஹம்பியில் உள்ள பழமை வாய்ந்த கோயில் உள்ளிட்டவற்றை காணச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், அவர்களின் முகத்தோற்றத்தை கண்டு சந்தேகத்தின் பேரில் தாங்கள் அனைவரும் இந்தியர்கள்தானா என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், அஸ்ஸாம் இந்தியாவில்தான் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு மாணவர்களை முகம் சுழிக்கச் செய்துள்ளனர்.
தொடர்ந்து ஆதார் அடையாள அட்டையை காண்பித்த பிறகே மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களின் இந்த செயல் அஸ்ஸாமில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் கர்நாடகாவில் உள்ள பாதுகாவலர்கள் சற்றும் கல்வியறிவு பெற்றிருக்கவில்லையா என விவாதம் நடத்தியும் வருகின்றனர்.