கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் 174 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் 14 முதல் நாடாளுமன்ற பருவமழைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற ஒரு நீண்ட இடைவெளி இருந்ததில்லை. நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான இடைவெளி ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடர், இந்த முறை கோவிட் கூட்டத்தொடர் என்று அழைக்கப்படலாம்.
கோவிட் தொற்றுநோய்க்கு நாடு முழுவதும் இதுவரை 41 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சுகாதார அவசரகால நிலை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும்
செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் இந்த கூட்டத்தொடர் காலையில் மக்களவை மற்றும் பிற்பகல் மாநிலங்களவை என்று இரண்டு பகுதிகளாக நடைபெறும். ஒவ்வொரு பகுதியும் நான்கு மணி நேரமாகக் குறைக்கப்படுவதால், இந்த முறை கேள்வி நேரம் ரத்து செய்யப்படுகிறது, நேரமில்லா நேரம் அரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது, மற்றும் உறுப்பினரின் தனிநபர் மசோதாக்கள் அனுமதிக்கப்படாது என்று சமீபத்திய அறிவிப்புகள் கூறுகின்றன.
எல்லைகளில் சீனாவின் அத்துமீறல்கள், உள்நாட்டில் கரோனா இறப்புகள், வளர்ச்சி விகிதம் 23 விழுக்காடாக குறைந்தது, வேலைவாய்ப்பின்மை மற்றும் முன்னெப்போதும் கண்டிராத தொழில்துறையின் தேக்கம் இவை அனைத்தும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
இந்த சூழ்நிலைகளில், அரசாங்கத்தை கேள்வி கேட்பதற்கும், பொதுநலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், சரியான பதில்களைப் பெறுவதற்கும் கேள்வி நேரம் சரியான வாய்ப்பாக இருக்கும். கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டாலும் அனைத்து கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை அளிக்கும் என்று மத்திய அரசு கூறுவது வாய்மொழி பதில்களுக்கு மாற்றாக இருக்காது.
ஜனநாயகம் என்பது பொறுப்புக்கூறல் எனும்போது கேள்வி நேரத்தை ரத்து செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்திய-சீனா மற்றும் இந்திய-பாக் போர்களின் அவசரகாலத்தின் போது கேள்வி நேரத்தை ரத்து செய்த சம்பவங்கள் இருந்தபோதிலும், தற்போதைய நெருக்கடி அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கேள்வி நேரம் என்பது நெருக்கடி காலங்களில் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த புரிதலுக்கான சரியான அளவுகோலாகும்.
நாடாளுமன்றத்தின் நோக்கம் என்பது ஆள்வது மட்டுமல்ல, மாறாக வாதிடுவது, விவாதிப்பது மற்றும் சிறந்த முடிவுகளை எட்டுவது போன்றவையாகும் என்ற அரசியலமைப்பு நிபுணர் சர் வில்லியம் ஐவர் ஜென்னிங்ஸின் கூற்று உண்மையாகும். சிறந்த ஜனநாயகம் என்பது ஆளும் அரசாங்கத்தை சரியான திசையில் வழிநடத்த எதிர்க்கட்சியினரின் விமர்சிக்கும் உரிமையை அங்கீகரிப்பதாகும்.
1957ஆம் ஆண்டில் பீகார் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் சுபாக் சிங் அவர்கள், கேள்வி-பதில் நேரத்தின் போது அப்போதைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியிடம் நாடாளுமன்றத்தின் எழுப்பிய கேள்வி, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் ஊழலை அம்பலப்படுத்தியது. மக்கள் சார்பாக அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைப்பது என்பது சபை உறுப்பினர்களின் தார்மீக கடமையாகும்.
1961 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிப்பதற்காக கேள்வி நேரத்தின்போது பிரிட்டன் பிரதமருக்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நாடாளுமன்றம் ஒரு வருடத்தில் குறைந்தது 160 நாள்களுக்கு கூடும், ஒரு கூட்டத்தொடரை 20 நாள்களுக்கு நடத்துவதற்கான உரிமை எதிர்க்கட்சிக்கு உண்டு என்பது ஜனநாயக உணர்வை எடுத்துக்காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்பது என்பது உறுப்பினர்களின் முழு உரிமை என்று மக்களவை செயலகமே அறிவித்திருந்த போதிலும், கேள்வி நேரத்தில் 67 விழுக்காடு மட்டுமே கடந்த மக்களவை கூட்டத்தொடரின் போது பயன்படுத்தப்பட்டது. 2009-19 காலகட்டத்தில், மாநிலங்களவை கேள்வி நேரத்தில் 41 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்தியது. கேள்வி நேரத்தை ரத்து செய்ததற்காக குற்றம் சாட்டும் கட்சிகள் கடந்த காலங்களில் மதிப்புமிக்க நேரத்தை தாங்கள் வீணடித்ததையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி அறிவித்த sab kasaath, sab kavikas, sab kavishwas (அனைவரின் ஒத்துழைப்புடனும், அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கைக்கும்) என்ற அறிவிப்பின் நோக்கத்திற்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.