இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் பன்னாட்டு நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன், "அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சீர்திருத்த சட்டங்களால் தொடக்ககால நிதிதேவை சுமை எளிதாக்கப்பட்டது. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போக்கு மாறியது. பொருளாதார பிரச்னையை தீர்க்க மேற்கொள்ளப்படும் விதிகள் எளிதாக்கப்பட்டது. கரோனா சூழலிலும் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரத்தில் உபரி நிதி உருவானது" என்றார்.
உபரி நிதி விவகாரத்தில் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் வளர்ச்சி ஏற்பட்டு நடப்பாண்டில் சமாளிக்கும் வகையிலான நிதி பற்றாக்குறை உருவாகும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நடப்பாண்டு உபரி நிதியோடு இந்திய பொருளாதாரம் நிறைவடையும் என்ற சந்தேகம் இருந்தது. தற்போது, தலைமை பொருளாதார ஆலோசகர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரம் உபரி நிதியுடன் நிறைவடைவது குறித்த விவகாரத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் மகிழ்ச்சி கொள்கிறாரா? அவரின் இந்த போக்கு என்னை குழப்பத்தில் தள்ளுகிறது. வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியிலில் உள்ள நமக்கு முதலீடு தேவை. உபரி நிதி விவகாரத்தில் மகிழ்ச்சி கொள்வதற்கு ஒன்றுமில்லை.
மீதமுள்ள உபரி நிதியின் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் வளர்ச்சி ஏற்பட்டு நடப்பாண்டில் சமாளிக்கும் வகையிலான நிதி பற்றாக்குறை உருவாகும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும்" என்றார்.