குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் வார்த்தைகளில் அடக்க முடியாத அளவுக்கு துயரங்களை வாரிக் கொடுத்திருக்கிறது, கரோனா ஊரடங்கு. அந்த வகையில் சென்னையிலிருந்து கோலார் மாவட்டத்திற்கு வேலை நிமித்தமாக குடிபெயர்ந்த பாத்திமாவின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் அடியோடு புரட்டிவிட்டது.
பாத்திமாவின் உலகம், அவளுடைய சகோதரன் மற்றும் தாயை மையமாகக் கொண்டது. அவளின் குழந்தை பருவத்தை வண்ணமயமான நினைவுகளுடன் மாற்றியவர் அவளுடைய சகோதரன்.
துரதிஷ்டவசமாக பாத்திமாவின் தாயார், வேலையில் ஈடுபடும்போது அவருடைய கால்களை இழந்துவிட்டார். இதனால் பாத்திமாவை மட்டுமல்லாது, அவளுடைய தாயாரையும் பாத்திமாவின் சகோதரன்தான் கவனித்துவந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக பாத்திமாவின் சின்னஞ்சிறிய குடும்பம் சென்னையிலிருந்து கோலார் மாவட்டம், பங்கார்பேட் நகரத்திற்கு வந்தனர்.
ஊரடங்கினால் வருவாய் இழந்த பாத்திமாவின் குடும்பம் ஒரு வேளை உணவிற்கே சிரமப்பட்டு வந்தனர். இந்த வறுமை நிலையில் பாத்திமாவின் சகோதரன் பல்வேறு வேலைகளுக்கு முயன்று, கடைசியில் பிச்சையெடுத்து தன் குடும்பத்தின் பசியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் பாத்திமாவின் அண்ணன் தொலைந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி பாத்திமா தன் சகோதரை வீதி வீதியாகத் தேடி திரிந்துள்ளார். பங்கார்பேட் முழுவதும் தேடியும் சிறுமியில் சிறிய கண்களில் அவளுடைய அண்ணனின் பிம்பம் விழவில்லை.
சோர்ந்துப் போன பாத்திமா அம்மாவின் மடியில் முகம்புதைத்து மனபாரத்தை குறைத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கோலார் மாவட்டத்தில் தன் மகன் இருப்பதாக அறிந்த பாத்திமாவின் தாயார் அங்கு செல்ல முடிவு எடுத்தார். இதையடுத்து சிறுமி பாத்திமா தன்னுடைய அம்மாவை வீல் சேரில் அமரவைத்து தள்ளியபடியே அண்ணனைத் தேடும் படலத்தை தொடங்கினார். கிட்டத்தட்ட 15 கி.மீ தன் தாயை வீல் சேரில் வைத்தபடி பாத்திமா கடந்துவந்தார். ஆனால் எங்கு தேடியும் பாத்திமாவின் அண்ணனைக் காணமுடியவில்லை. யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால் தொலைந்த தன் சகோதரனின் புகைப்படம் கூட பாத்திமாவிடம் இல்லை.
கால்களில் செருப்புகூட இல்லாமல் சிறுமி பாத்திமா தாயாரை வீல் சேரில் தள்ளும் காட்சி கண்களில் நீரை வரவழைக்கிறது. வீட்டிலிருந்தால் உண்ண உணவில்லை, அந்த சிறிய அறைக்கு செலுத்த சொற்ப வாடகையும் இல்லை.
வறுமை பாத்திமாவை சாலைக்கு அழைத்துவந்துவிட்டது. தன்னுடைய சகோதரன் விரைவில் வருவான், தான் தொலைத்த வண்ணக் கனவுகளை மீட்டுக் கொடுப்பான் என பாத்திமா நம்பிக் கொண்டிருக்கிறாள்.
அந்த நம்பிக்கைக் கீற்றோடு அவளின் கால்கள் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. அவள் நம்பிக்கை வீண் போகாமல் கைவசப்படட்டும்!
இதையும் படிங்க: கரோனாவுக்கு நடுவே ஒரு குட்டி ரிலாக்ஸ் - நடனமாடிய மருத்துவர்கள்