கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத்திணறல், சளி, தசை வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோயின் அறிகுறிகளாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. இதையடுத்து, நாவில் திடீர் சுவை இழப்பு, வாசனையின்மை ஆகியவை அறிகுறிகளாகச் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனை, அமெரிக்க தோல் நோய் அகாடமியுடன் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில், கால் விரல்களில் நிறமாற்றம் ஏற்படுவது, தடிப்புகள் ஆகியவை கரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் எஸ்தர் இ. ஃபிரிமான் கூறுகையில், "பல்வேறு தோல் நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டதில், கரோனா காரணமாக பல்வேறு தடிப்புகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. தோல் சார்ந்த பிரச்னை உடைய 716 கரோனா நோயாளிகளிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 விழுக்காடு நோயாளிகளிடம் தடிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பாலானவர்களின் காலில் ஊதா நிறத்தில் தடிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வைரஸ் நோயாளிகளின் பெயர்களை வெளியிடுவதால் என்ன பயன்? மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி