புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப்பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத சகஸ்ரநாம அர்ச்சனை விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.
நாள்தோறும் மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ தீபாராதனை நடைபெறும். மேலும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் உற்சவர் ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள் ஆண்டாள் ரங்க மன்னர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்வில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி ஏராளமான பக்தர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளை வழிபட்டனர்.