உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகராஜ் மாவட்டத்தில் உள்ள பிரபல் ராஜ்ஷிலா ஹோட்டலில் சாஹில் என்ற இளைஞர் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று(நவ-4) காலையில் நீண்ட நேரமாகியும் சாஹில் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர் சென்று கதவை தட்டியபோது பதில் இல்லை. அதனால் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சாஹில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சாஹில் தங்கியிருந்த அறையை சோதனை செய்த காவல் துறையினர் அங்கிருந்து ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை கைப்பற்றினர். அதில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அதிலிருந்த தகவலை கொண்டு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சாஹில் தனது இரு சக்கர வாகனம் மூலம் லக்னோ சென்றுவிட்டு பின்னர் பிரயாகராஜ் மாவட்டத்திற்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். இருப்பினும் பாஞ்சாபை சேர்ந்த இளைஞர் உத்தரபிரதேசம் வந்த தற்கொலை செய்து கொணடதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.