மாநிலத்தில் சோதனைகள், விசாரணைகளை மேற்கொள்ள சிபிஐக்கு அளித்துவந்த அனுமதியை தற்போது பஞ்சாப் அரசு திரும்பப்பெற்றுள்ளது. மேற்குவங்கம், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது இந்த நடவடிக்கையை பஞ்சாப் அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம், ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை மேற்கொள்ள மாநில அரசின் அனுமதி கட்டாயமாகியுள்ளது. பொதுவாக, டெல்லியில் மட்டுமே மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அதிகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியை பெற்றே சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொது ஒப்புதல் வழங்கப்படும். தற்போது, அது திரும்பப்பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டுவருவதாக பல்வேறு மாநில அரசுகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துவந்த நிலையில், மத்திய புலனாய்வு துறைக்கு கொடுக்கப்பட்ட பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது.