கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மதுபானக் கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டது. இதையடுத்து, மக்கள் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் பக்கம் மதுப்பிரியர்கள் திரும்பினர். இதனால், பல போலியான மதுபானங்களை குடித்ததில் பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 86 பேருக்கு உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலக்கட்டத்தில் மட்டும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 270 வழக்குப் பதிவுகளும், கடத்தல்காரர்கள் 301 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லூதியானா காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டவிரோத மதுபானம் விற்பனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தனிப்படை ஒன்றை அமைத்தோம். இந்த அமைப்பில் சுமார் 30 காவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபானம் வடிகட்டுதல், கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதனடிப்படையில், நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த அதிரடிச் சோதனையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் இரண்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான மஹுவா லஹான், 1,612 லிட்டர் கள்ளச்சாராயம், 4,606 லிட்டர் ஒயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இதுமட்டுமின்றி, சட்லெஜ் ஆற்றின் அருகே 50 ஆயிரம் லிட்டர் சட்டவிரோத மதுபானங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.