ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அமைந்துள்ளது அவந்திபுரா. இங்குள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உள்ளிட்ட 2,500 பேர், 78 வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவந்திபுரா பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவ வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலால் நிலைகுலைந்த பாதுகாப்பு படையினர், என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பயங்கர தாக்குதல் சம்பவங்களினால், 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த 20 வருடங்களில் நடக்காத மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என மோடியும், ராஜ்நாத் சிங்கும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், "இந்த பயங்கரவாத தாக்குதல் உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. வெடிமருந்துகளோடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை முறையாக நாங்கள் சோதனை செய்யவில்லை.
இதில் எங்கள் தவறும் இருக்கிறது. அதனை ஒத்துக்கொள்கிறோம். தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அடில் அஹமது தார் என்பவர் தேடப்படும் பட்டியலில் இருந்தவர். ஆனால் அவரை எங்களால் பிடிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்" என்றார்.