புதுச்சேரியில் கரோனா பரிசோதனை கிராமப் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நகரப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட வீதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேடி சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (செப்.20) நெல்லித்தோப்பு தொகுதி மேட்டு தெருவில் நடைபெற்ற கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முகாமினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அங்கு பரிசோதனைக்கு மக்கள் சொற்ப எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை பரிசோதனைக்கு வருமாறு வீதியில் நின்று முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்தார். பின்னர் அங்குள்ள மருத்துவ அலுவலர்களிடம் பரிசோதனை சம்பந்தமாகக் கேட்டறிந்தார்.
மேலும், முகாம்முக்கு சென்றபோது மக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணியும்படி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.