புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது உடலை உடற்கூறாய்வு செய்யும் முன்பு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதனையடுத்து அவரது உடலை உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது இறந்தவரின் உடலை சவக்குழியில் அலட்சியமாகத் தள்ளுவது போன்று சமூக வலைதளத்தில் காணொலி ஒன்று வெளியானது. இந்த விவகாரத்தில் மருத்துவப் பணியாளர் ஒருவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடவடிக்கை எடுத்த அலுவலர்களுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். இவர்களது போராட்டத்தில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.