புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் யாரும் தேவையற்ற வகையில் சாலைகளில் சுற்ற வேண்டாம் எனப் புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் காணொலி பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி காணொலி பதிவில் அவர் கூறியாதாவது:
புதுச்சேரியில் தற்போது மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே புதுச்சேரி மாநிலத்தில் தற்போது நோய்த்தொற்றால் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு முறையும் தளர்வுகள் தரும்போது மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. எனவே நோய்த்தடுப்பு விவகாரத்தில், மாநில மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் கரோனா பரவலைத் தடுப்பது பெரும் சவாலாக மாறிவிடும்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் போதுமான மருத்துவமனைகள், படுக்கை வசதிகள், கரோனா தொடர்பான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளன.
மேலும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.