புதுச்சேரியில் முன்னதாக எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 72 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நான்கு பேர் வீடு திரும்பினர். தற்போது மாநிலத்தில் மூன்று பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் மூவரிடமும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டதில் மூலகுளம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக, புதுச்சேரியில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநில எல்லைப் பகுதி அருகே மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வருபவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் மோகன் குமார் கூறினார்.
இதையும் படிங்க:புதுவையில் அமைச்சர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை