புதுச்சேரி சட்டப்பேரவை அரசு கொறடா அனந்தராமன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில், எந்த ஒரு இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை.
இதனால் புதுவையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே புதுச்சேரி மாநில மாணவர்களின் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் முதலமைச்சர் நாராயணசாமியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசிடம் இட ஒதுக்கீடு கோரி வலியுறுத்தும் வகையில், அரசு கொறடா என்ற முறையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”மத்திய அரசுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு மருத்துவ இடங்களையும் ஒதுக்கீடு செய்கிறோம். இந்த இடங்களில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 100 விழுக்காடு இடங்களையும் மத்திய அரசு நிரப்புகிறது.
ஆனால் அந்த இடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. எனவே இதில் புதுவை மாநில அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
தமிழ்நாடு அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இரண்டு வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை எடுத்துக் கொள்வதாக நீதிபதி இன்று கூறியுள்ளார். இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : புதுச்சேரி பாஜக நிர்வாகிக்கு கரோனா!