புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-20ஆம் கல்வியாண்டில் 225 சதவீதம் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும்.
புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை அனைத்து பாடப்பிரிவுகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை 16வது நாளாக போராட்டம் நடத்திவருகிறது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் தான் புதுச்சேரி பல்கலைகழக மாணவர் பேரவையின் கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் காந்தி வீதி, நேரு வீதி, வழியாக கவர்னர் மாளிகையை நோக்கி வந்தனர். அவர்களை தபால் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படியுங்கள்: இளைஞர்களை அடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவலர்கள்...