புதுச்சேரி தட்டாஞ்சாவடி விபிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரதா தம்பதி. இவர்களது மகன் வெங்கடசுப்ரமணியன் கேந்திர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு பிறக்கும் போதே இடது கையில் பாதிப்பு இருந்துள்ளது. இருப்பினும் அதை பொருட்படுத்தாத வெங்கடசுப்ரமணியன் இசை, கராத்தே, சமூகப்பணி, விளையாட்டு, யோகா, பிற மொழி கற்றல் போன்ற பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.
இவர் இளம்வயதாக இருக்கும் போதே, தேசிய அளவிலான காந்தி அமைதி முகாமில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ஹரியானா மாநிலம் கர்ணல்லில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இளைஞர் விழா மற்றும் கலை விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார். அது மட்டுமின்றி, மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், மாநில அளவில் நடந்துள்ள பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார்.
இவரது சாதனையைப் பாராட்டி புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பாக சிறப்பு விருதினை வழங்கியுள்ளது. மேலும் அபாகஸ் பயிற்சியில் 10 அலகுகளை முடித்துள்ள இவர் சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார். இப்படி பல விருதுகளுக்கு சொந்தக்காரரான வெங்கடசுப்ரமணியன் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பாக வழங்கும் தேசிய குழந்தை விருதுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையில் அந்த விருதையும் பெற்றார். அப்போது பிரதமர் மோடி இவரை பாராட்டியுள்ளார்.
இவரது தாய் ஜெயபிரதா கூறுகையில், "தனது மகனை நீச்சல் போட்டி, அபாகஸ் போட்டி உள்ளிட்ட போட்டிகளுக்கு பங்கேற்க அழைத்துச் செல்லும்போது எல்லோரும் எதிர்மறையாகவே பேசினர். இதனையும் மீறி நம்பிக்கையோடு துணிந்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்தேன். வீட்டில் கூட அவனது தந்தை சைக்கிள் ஓட்ட விடமாட்டார். எங்கேயும் செல்ல அனுமதிக்க மாட்டார். இதையெல்லாம் மீறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டியதால் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்" என்று பெருமிதம் கொண்டார்.
பின்னர் வெங்கட சுப்ரமணியன் கூறுகையில், "இந்த விருது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள் பெருமிதத்துடன் பார்க்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இதற்காக பேட்மிட்டன் பயிற்சி பெற்று வருகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: