புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பிரதான கட்சியான காங்கிரஸ் தனது மக்களவை வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் கூட்டணியில் உள்ள திமுக தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், மாநில தலைவர் நமச்சிவாயம், சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் ஏவி சுப்பிரமணியம் ஆகியோர் டெல்லியில் இரண்டு நாட்களாகமுகாமிட்டு இருந்தனர்.
அங்கு கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்து புதுச்சேரி பாராளுமன்ற வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து இன்றோ நாளையோ காங்கிரஸ் வேட்பாளர் யார் என மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று டெல்லியில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமியும், சபாநாயகர் வைத்திலிங்கமும் புதுச்சேரி திரும்பினர்.மக்களவை தொகுதியின் காங். வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதால், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.