புதுச்சேரிக்கு வந்த அண்டை மாநிலத்தவர் நாளை(ஜூன் 20) பகல் 12 மணிக்குள் சுகாதார நிலையத்தில் பதிவு செய்யமாறு மாவட்ட ஆட்சியர் அருண் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த சில வாரங்களாக உரிய அனுமதியின்றி அண்டை மாநிலத்தவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அளவில் வந்ததால்தான் கரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணம் என தெரிய வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரிக்குக் கடந்த ஒன்றாம் தேதி முதல் வெளிமாநிலங்களிலிருந்து வந்த அனைவரும் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் சட்டத்தின் கீழ் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர்கள் தனியாக ஒரு சுகாதார பதிவேட்டை தயார் செய்யவேண்டும். அதன்பின்னர் புதுச்சேரிக்கு அண்மையில் வந்த மக்களின் அனைத்து சுகாதார பிரச்னைகளையும் பதிவு செய்யவேண்டும்.
இப்பணிகளை வரும் ஜுன் 20ம் தேதி பகல் 12 மணிக்குள் முடிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.