புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"மத்திய அரசு உத்தரவுப்படி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், தகுந்த இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிந்து இறைவனை வழிபட மக்கள் தயார் நிலையில் உள்ளனர். எனவே, ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயங்களை திறந்து மக்கள் இறைவனை வழிபட மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளேன். இதனை பிரதமர் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரமானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது.
இதனை முடிவு செய்வதற்கு மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. இதனால் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் புதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவையில் உள்ள யூனியன் பிரதேசங்களாகும்.
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை எளிய மக்களுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகையும் அளித்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு, யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்க பார்க்கிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாநிலங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் புதுச்சேரி ஏற்றுக் கொள்ளாது. எக்காரணம் கொண்டும் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். மத்திய அரசு மக்கள் உணர்வுகளையும், மாநில அரசு உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். மின்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக உள்ளதே தவிர லாபம் ஈட்டும் துறையாக இல்லை. மாநிலங்கள் விரும்பாவிட்டால் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மின்சாரத்தை தனியார் மயமாக்கினால் புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், தொழிற்சாலை வருவதும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம்" என்றார்.
இதையும் படிங்க: நோயாளியை புதுச்சேரிக்குள் அனுமதிக்காத காவல் துறை