புதுச்சேரி மாநில உள்ளாட்சித் துறை அமைச்சராக திறன் பட செயல்பட்டவர், ஏழுமலை. இவர் புதுச்சேரி மாநிலம், பங்கூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதும், கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில அரசின் அறிவுறுத்தலோடு அவருக்கு ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிகழ்வு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் மாநில அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் புதுச்சேரி பங்கூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஏழுமலையின் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர்த் தூவி மரியாதை செய்தார்.
இதற்கு முன்னதாக காவல் துறை அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, ஜெயமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் கேஎஸ்பி ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:அன்பழகன் படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை