புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள காணொலியில், “தமிழ் மொழிக்காகப் பாடுபட்ட மன்னர்மன்னன் என்கிற கோபதி இறந்துவிட்டார். இவர், சிறந்த தமிழறிஞர், சுதந்திர போராட்ட வீரர். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனான மன்னர்மன்னனின் இறப்பு புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு. மாநில அரசின் சார்பில் அவரது உடல் பாரதிதாசன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. அவருக்கு மாநில அரசின் சார்பில் இறுதிச்சடங்கு செய்யப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
புதுச்சேரியில் இன்று 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இருப்பினும், தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் இயற்கை முறையில் எதிர்ப்பு மருந்துகளை வழங்கிவருகிறோம்.
சித்தா முறையில் (ஆயுஷ் நிறுவனம்) சிகிச்சை அளிப்பதையடுத்து, கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்துவருவதாகத் தெரிகிறது. எனவே, சித்த மருத்துவர்களையும் இந்தச் சிகிச்சைக்குப் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது 513 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளோம். இதனால் பரிசோதனைகளை அதிகரிக்க முடியும். புதுச்சேரி , உழவர்கரை, வில்லியனூர், பாகூர் ஆகிய பகுதிகளில் தொற்று குறித்து ஆய்வுசெய்ய நான்கு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.