இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு எட்டு பேர் தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
பேருந்து, ரயில் இயக்காததால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு நடந்துச் செல்கின்றனர். இது மிகவும் வேதனையான விஷயம். புதுச்சேரியில் இருந்து பிகார், உத்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-காஸ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல மாநில நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்று அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசிய, சவூதி அரேபியா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ளவர்கள் இங்கே அழைத்து வர இருக்கின்றனர்.
ராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட துறைகளும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ரகசியமாக வைக்கவேண்டியவைகளை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு திட்டங்கள் யார் மூலம் செயல்படுத்துவார்கள் என்பதை மத்திய நிதி அமைச்சர் தெளிவாக கூறவேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்தாலும், புதுச்சேரியில் ஹோட்டல்களில் தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து உணவருந்த அனுமதிக்க உள்ளதாகவும், தியேட்டர் தவிர மால்கள் திறக்க அனுமதிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதையும் பார்க்க: ‘தனியார் பங்களிப்பின் மூலம் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - மயில்சாமி அண்ணாதுரை