புதுச்சேரிக்கு அருகே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பூத்துறை என்ற கிராமத்தில் உள்ளது ஆரண்ய காடு.
இந்த கிராமத்தில் ஆரோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலபரப்பு வெற்று நிலமாக இருந்தது, கடந்த 1994ஆம் ஆண்டு பண்படுத்தும் பணிக்காக இயற்கை மீது பெருங்காதல் கொண்ட சரவணனிடம் இந்த நிலம் ஒப்படைக்கபட்டது.
பொட்டல் காடாக இருந்த நிலத்தை கால் நூற்றாண்டு கடின உழைப்பினால் காடாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் சரவணன்.
சரவணன் தனது குடும்பத்தாருடன் இணைந்து 25 ஆண்டு கால உழைப்பின் பயனாக பொட்டல் காடாக இருந்த நிலம் பச்சைப் போர்வை போர்த்திய வனமாக பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது.
இதுகுறித்து ஆரண்ய காட்டினை உருவாக்கிய சரவணன் கூறுகையில், “ஆரம்ப காலத்தில் வெற்று நிலமாக இருந்த நிலத்தில் சிறு சிறு செடிகள் நட்டேன். எனக்கு உதவியாக இப்பகுதி சிறுவர்களும் இருந்தனர். அத்துடன் இங்கு குடியேறிய பறவைகள் மரங்களில் கனிந்த பழங்களைை உண்டு போட்ட எச்சத்தின் மூலமாக உதவி இந்த காடு உருவாகியுள்ளது.
இரவு - பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பாம்புகளும் விஷப்பூச்சிகளும் சர்வ சாதாரணமாக உலாவிக் கொண்டிருந்த சூழல் அச்சம் தருவதாக இருந்தது. போகப்போக அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு இந்த இடத்திலேயே தங்கி மரம் வளர்ப்பில் ஈடுபட்டேன். இந்த நிலத்தை வளப்படுத்த மழை நீரை வீணாக்காமல் சேமிக்க முடிவு செய்ததே இந்த காடு வளர நான் எடுத்த முதல் முயற்சி" என்றார்.
இந்தக் காட்டில் சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, கருங்காலி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்களை வாழ்விடமாகக் கொண்டு 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. எறும்பு தின்னி உள்பட பல உயிரினங்கள் இங்கு குடிபெயர்ந்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் மரங்கள் இந்த காட்டில் உள்ளன.
இந்த ஆரண்ய காடினை காண்பதற்கும் அறிந்து கொள்ளவும் தாவரவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் என பலர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு மரம், காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சியையும் சுற்றுச்சூழல் கல்வி குறித்த பயிற்சியையும் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் சரவணன் இலவசமாக செய்து வருகிறார்.
இயற்கை ஆர்வலர் சரவணனை போன்று காடுகள் வளர்க்க முடியவில்லை என்றாலும் இந்த பூமியைக் காக்க வீட்டுக்கு ஒரு மரத்தை வளர்த்து நீர் வளத்தைக் காப்போம்.
இதையும் படிங்க : 'காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' - டி. ராஜா