புதுச்சேரி சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதனை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், “முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்போல் மத்திய அரசை எதிர்க்கும் வேலையை செய்துவருகிறார். இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டப்பேரவையில் உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் அரசு அறிவித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் துறைமுக விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
புதுச்சேரியில் பஞ்சாலை மூடப்பட்டுள்ளன. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நான்கு ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்று பல்வேறு நலன் சார்ந்த பிரச்னைகளும் நிதி சம்பந்த பிரச்னைகளும் உள்ளன.
மத்திய அரசு 2020 -21ஆம் ஆண்டிற்கு ஆயிரத்து 703 கோடி நிதி அளித்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு முழுமையான பட்ஜெட்டை அரசு சமர்ப்பிக்கலாம். ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. அதே சமயத்தில் தனது அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பேரவைச் சிறப்புக்கூட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி கூட்டியுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: 'வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அகில இந்திய அரசியலை பேசுகிறார் நாராயணசாமி' - ரங்கசாமி சாடல்