புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மாலை நேரங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடப்பது வழக்கம். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை ஆளுநரைச் சந்தித்து தெரிவிப்பார்கள். இந்நிலையில் புதுச்சேரி சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று மக்கள் சந்திப்பு நிகழ்வில் இன்று பங்கேற்றார். அப்போது, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து தனது துறைகள் தொடர்பான பிரச்னைகளையும், ஏனாம் தொகுதி மக்கள் பிரச்னைகளையும் தீர்க்குமாறு வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “எனது கோரிக்கைகளில் ஆளுநர் கிரண் பேடி சரியாக கவனம் கொள்ளவில்லை. மாநில அமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால், பொது மக்களின் நிலை என்ன என்றே சிந்திக்க முடியவில்லை. எந்தத் திட்டங்களை நிறைவேற்றவும் ஆளுநர் கிரண் பேடி தடையாக இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து புகார் கூறவுள்ளேன் “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் - தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!