புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் மக்கள் குறைகேட்பு குறித்த செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புத்தகம் வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தை, ஆளுநர் இன்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகத்தினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ' என்னுடைய பதவி காலத்தில் நான் தவறு செய்தால் என் மீது சம்மன் அனுப்பியும், மேல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனால்தான் அனைத்து விஷயங்களிலும் நான் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுகிறேன். குறிப்பாக, நிதி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு இருந்தாலும் சிலவற்றை தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், சிலவற்றை ஆளுநருக்கும் வழங்கியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நிதியைப் பொறுத்தவரை மிகப் பெரிய பொறுப்பு என் வசம் இருக்கிறது. எனவே, நான் அந்த விஷயத்தில் சரியாகத்தான் நடக்க முடியும். யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் பிறகு இறுதி முடிவு என்பது உச்சநீதிமன்றம் எடுக்கும் ' என்றார்.
இதையும் படிங்க: ’மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதை ரஜினி நிறுத்த வேண்டும்’