புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய முன்னாள் நிதியமைச்சர் கைது செய்யப்பட்ட விதம் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அப்படி சிதம்பரம் என்ன பொருளாதாரம் குற்றம் செய்துவிட்டார், அவர் மீது என்ன குற்றம் என்பதை நிரூபிக்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சொன்ன வார்த்தையை வைத்து அவரை கைது செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சிதம்பரம் மத்திய அரசை எதிர்த்தும் பொருளாதார வீழ்ச்சியை குறித்தும் ட்விட்டரில் பதிவு செய்து வருவதும் பத்திரிகையில் எழுதுவதையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம்போல் தெரிகிறது. கொலைக் குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின்படி அவர் கைது செய்யப்படுவதை ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறினார்.
