புதுச்சேரியில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களும், மூன்று அரசு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வக தொழில்நுட்ப செவிலியர், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 610 பேர் தினக்கூலிகளாக பணியில் உள்ளனர். பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 12 நாள்களாக சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, புதுச்சேரி அரசு 2017ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள் நியமனத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை தினக்கூலிகளுக்கு வழங்குவது என கொள்கை முடிவு எடுத்ததை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலைக்குள் போராட்டம் கைவிடப்படவேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து இச்சங்கத்தினர் ஆளுநரைச் சந்தித்து இக்கோரிக்கைகள் சம்பந்தமாக பேச அனுமதி கேட்டு மறுக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆளுநர் மாளிகை அருகே திடீரென போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்கம்- வெறிச்சோடிய கொடைக்கானல்!