கடந்த 2015 ஆண்டு மே மாதம் முதல் காலியாக இருந்த புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் பாலகிருஷ்ணனை நியமிக்க புதுச்சேரி அமைச்சரவை கடந்தாண்டு முடிவு செய்து, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய, துணைநிலை ஆளுநர் தேர்வுக்குழுவை நியமித்தார்.
மேலும், அப்பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டார். அதை புதுச்சேரி சட்டமன்றம் நிராகரித்தது. இதனிடையே, பாலகிருஷ்ணன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், மத்திய அரசின் உத்தரவையும், துணைநிலை ஆளுநரின் உத்தரவையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு, இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் வெளியிட்ட அறிவிப்புக்கு தடைகோரிய மனுவுக்கு விளக்கமளிக்க ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:
மக்கள் சேவகராகவும் மருத்துவ சேவகராகவும் இருந்தவர் தமிழிசை-கிரண்பேடி புகழாரம்!