புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நடப்பு ஆண்டில் மட்டும் 18ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை 710 ரூபாயாக உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்களுக்கு இது மிகப்பெரிய சுமையேற்றி இருப்பதால் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு முதல்கட்டமாக 100 ரூபாய் விலை உயர்வை குறைக்க வேண்டும்.
மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரியில் நாளை அண்ணா சிலை முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. மழை பெய்தாலும், இந்த போராட்டம் நடக்கும்.
மருத்துவப் படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெற புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளில் 10 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய ராணுவ விமானம்!