புதுச்சேரி: புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்பது, மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
நாட்டிலேயே கரோனா தொற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம் உள்ள புதுச்சேரி மாநிலத்தில், அதைக் கட்டுப்படுத்த எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மக்களோடு பள்ளி மாணவர் மாணவிகளும் பாதிக்கப்படுகிற வகையில் தான்தோன்றித்தனமாக அரசின் செயல்பாடு இருகிறது.
புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் இல்லை. 10 மற்றும் 12ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு தேர்வு எழுதி, மதிப்பெண் சான்றிதழ் தமிழ்நாடு அரசு மூலம் தான் புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க நாம் கல்வியில் தமிழ்நாட்டை சார்ந்திருக்கிறோம். தற்போது கரோனா நோய்த்தொற்று சம்மந்தமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பள்ளிகளை இதுவரை திறக்கவில்லை.
நமது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் அஇஅதிமுக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ- மாணவியரின் உயிரை தவிர வேறு எதுவும் தற்போது முக்கியம் இல்லை என தெரிவித்து, பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து உடனடியாக பள்ளிகள் திறப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசானது மாணவ- மாணவியர் நலனையும் அவர்களின் உயிரையும் கருத்தில் கொள்ளாமல் தனியார் பள்ளி உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவசர அவசரமாக நாளை (அதாவது இன்று அக்.8) முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.
இது மாணவ- மாணவிகளின் விரோத செயலாகும். பள்ளிகள் திறப்பு சம்மந்தமாக மத்திய அரசின் வழிகாட்டுதலையும் புதுச்சேரி அரசு சீர் தூக்கி பார்க்கவில்லை. மாணவ மாணவியர் உயிரோடு விளையாடும் உரிமையை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது.?
தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க ஆலோசனை கேட்கும்போதே மாணவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என கூக்குரல் விட்ட திமுக தலைவர் திரு ஸ்டாலின், தற்போது திமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் மாணவ மாணவியரின் உயிரை பணயமாக வைத்து அவசர அவசரமாக பள்ளிகளை திறப்பதில் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்?
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியான ஏனத்தில் பள்ளிகள் திறக்க அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி பள்ளிகள் அங்கு திறக்கப்படவில்லை.
அரசின் இந்த தவறான முடிவை அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசிடம் கோரிக்கையாக வைத்திருந்தும் புதுச்சேரி முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கண்ணசைவிற்காக காத்துக்கொண்டு காலம் கடத்துகிறார்.
அமைச்சரவையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் தனது தொகுதியான ஏனாமில் பள்ளிகள் திறக்க சாத்தியம் இல்லை என கூறி பள்ளிகளை திறக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அவரது செயலின் படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆளும் அரசின் எதேச்சதிகார போக்கை கண்டிக்கும் விதத்தில் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளிகளை திறக்காமல் மாணவர்களின் நலனுக்காக பார்த்துக்கொள்ள வேண்டும்.
நிச்சயம் எனது உப்பளம் தொகுதியில் உள்ள பள்ளிகளை மாணவ செல்வங்களுக்காக நான் திறக்க விடமாட்டேன். தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் எந்த பள்ளியிலும் வகுப்பறைகள் இல்லாத நிலையில் வீண் பிடிவாதத்திற்கு பள்ளிகளை அரசு திறப்பதால் அதனால் வரப்போகும் அத்தனை விளைவுகளுக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோரின் அனுமதி அவசியம் - முதலமைச்சர் நாராயணசாமி