புதுச்சேரியின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ”ஆண்டு செலவு அறிக்கையைப் படித்துப் பார்ப்பதற்கு அவகாசம் வேண்டும். அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். துறை ரீதியான செலவு விவரங்களை அளிக்க வேண்டும். அதனால் பேரவையைப் பின்னர் நடத்திக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு, முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்பே கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என்றும், ஆதலால் சட்டப்படி தாங்கள் இதில் பங்கேற்கலாம் என்று பதில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இருப்பினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் கிரண்பேடி பங்கேற்பாரா, பங்கேற்க மாட்டாரா என்ற கேள்வியுடன் காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.
அப்போது, துணைநிலை ஆளுநர் வராததால், துணைநிலை ஆளுநர் உரையைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவை தொடங்கியவுடன் அறிவித்தார். இது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவையை ஒத்திவைப்பதாகவும், அதாவது ஆளுநர் உரை இடம் பெறாததால் தற்போது தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மதியம் 12.05 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடி, முதலமைச்சர் நாராயணசாமி, பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் கிரண்பேடி கோபமாகிவிட்டார்"