புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்கள் என்ற அடிப்படையில் 1120 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களைக் கொண்டு புதுச்சேரி கால்வாய்கள், பூங்கா தூய்மைப்படுத்தும் பணி, சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியில் அரசு ஈடுபடுத்தியது. இதில் நாளொன்றுக்கு இவர்களுக்கு 200 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்கத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை அரசு தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அச்சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் சட்டப்பேரவையை முற்றுகையிட 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சட்டப்பேரவையில் அனுமதிக்க தடைவிதித்து, தடுப்புகளை போட்டு தடுத்தனர். பின்னர், அவர்கள் அப்பகுதியில் திடீர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த அவர்களை கலைந்துச் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சம்பளம் வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!